×

தண்ணீருக்கு மக்கள் திண்டாடும் நிலையில் தனியார் குவாரிக்காக கல்குவாரி தண்ணீர் திருட்டு: பொதுமக்கள் புகார்

சென்னை: மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் அருகே  நல்லாமூர் ஊராட்சியில், தண்ணீருக்காக மக்கள் திண்டாடி வரும் நிலையில் கல் குவாரியில் இருந்து, தனிநபர்களால் தினமும் பல்லாயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர் திருடப்படுகிறது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.மதுராந்தகம் அடுத்த சித்தாமூர் ஒன்றியத்தில் நல்லாமூர் ஊராட்சி உள்ளது. இங்கு, அரசு மற்றும் தனியார் கல்குவாரிகள் இயங்கி வந்தன. கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன், அரசு கல்குவாரி இயங்குவது நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தனியார் கல்குவாரி மட்டும் இயங்கி வருகிறது. நிறுத்தப்பட்ட அரசு கல்குவாரி சுமார் 250 அடி ஆழம் கொண்டது. இந்த குவாரி பள்ளத்தில் நீர் ஊற்று காரணமாக பல லட்சம் லிட்டர் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த தண்ணீரை தனியார் கல்குவாரி உரிமையாளர் இரவும், பகலுமாக டேங்கர் லாரிகள் மூலம் திருட்டுத்தனமாக உறிஞ்சி எடுத்து சென்று, அவர்களது குவாரிக்கு பயன்படுத்தி வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான தோப்புகளில் உள்ள மரங்களுக்கு பாய்ச்சி வருகின்றனர்.இச்சம்பவம் ஊராட்சி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், “இங்கு கல்குவாரியில் அதிகளவில் பள்ளம் எடுப்பதால் எங்கள் பகுதியில் உள்ள நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. ஆண்டுதோறும் கோடைகாலங்களில் தண்ணீருக்காக ஊர் ஊராக சுற்றித்திரியும் நிலை உள்ளது. இந்நிலையில், அரசு கல்குவாரியில் இருந்து தினமும் பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் தனியாரால் திருடப்படுகிறது. இது, எங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது. அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை. எனவே, முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கல்குவாரியில் உள்ள தண்ணீரை கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாய் மாற்றி தந்து, அருகில் உள்ள குவாரியால் தண்ணீர் மாசடைவதை தடுத்து நிறுத்த மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.



Tags : Gulwwari ,quarry , People are hungry, Gulwavari, water theft, civilians
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...